திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல்
போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன.
கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலையுடன் நட்புடனிருந்ததால்
தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை.ஏனென்றால்திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத
உதவியாலும்,படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார்.இந்த உதவி எதிரொலியே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருக்கச் செய்தது.எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களைஅனுபவித்தனர்.காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது.டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர்.கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை,டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிருந்து வெளியேறச்
செய்தார்.இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்து கொண்டதாக நினைத்த டச்சுக்காரர்கள்திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன்,அங்கிருந்த அப்பாவி இந்துக்களைக்
கொள்ளையிட்டனர்.வீடுகளுக்குத் தீயிட்டனர்.தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர்.கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து றிந்தனர்.கற்சிற்பங்களை
உடைத்தனர்.அங்கிருந்த எழில்மிகு அய்ம்பொன் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.தங்களுடைய தெய்வத்தை களவாடிச்
செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்களாகிய தலத்தார் [அனைத்து ஜாதி மக்கள்] தங்கள் கையில் கிடைத்தஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர்.வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர்.திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர்.டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம்
களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல்,மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் காரணம் என்பதை உணர்ந்தனர். டச்சுக்காரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து விடக் கூடாது என்பதற்காக சண்முகரின் சிலை,நடராஜப்பெருமானின்
சிலை ஆகியவற்றை கடலினுள் எறிந்தனர்.முருகனின் அற்புதத்தால் புயலும்,மழையும் நின்றது. டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோயிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக்கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளை
தூங்கும் போது முருகப்பெருமான் கனவில் காட்சி தந்து கடலினுள் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்று கூறி மறைந்தார்.தம்முடைய பணியாளர்கள்,நண்பர்கள்,கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடலுக்குள் படகில் சென்றார்.சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.மெய் சிலிர்த்த அவர்கள் முருகா முருகா என்று மெய்மறந்து முழக்கமிட்டு தலை மீது கைகூப்பினர்.அங்கே எலுமிச்சம்பழம் ஒன்று தந்தது. அந்த இடத்தில் குதித்தனர்,என்னே அற்புதம் சண்முகர்சிலையும்,நடராஜர் சிலையும் கிடைத்தது.நடராஜர் சிலையின் பீடத்தில் திருநள்ளாறு என்று
எழுதப்பட்டிருந்தது.மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குடமுழுக்கு நடைபெற்றது.டச்சுக்காரர்களின் கொள்ளையால் மனம் வருந்திய திருமலைகொள்ளையடித்துச் செல்லப்பட்ட எஞ்சியப் பொருட்களை மீட்டால்தான் மக்கள் மதிப்பார்கள் எனக் கருதி
டச்சுக்காரர்கள் கோரிய பொன்னை தமது காயல்பட்டினம் கணக்கப் பிள்ளை மூலமாக இலங்கைக்குக்கொடுத்தனுப்பி மீட்டார்.கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போடவைத்ததும்,சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும்.
நக்கீரனுக்கு அருள்புரிந்த முருகன்
முக்கண்ணனான சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால்,பெரு நோயான குஷ்டத்தால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார்.அவ்வயம்,கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத்
தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத் தொடங்கினார் அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரமொன்றிலிருந்து ஒரு அரச
இலையை விழச் செய்தது.அவ்விலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது .இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.சிவ பூஜை செய்ய மறந்த
நக்கீரனை கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்சீரலைவாயில் [திருச்செந்தூர்] உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித்துதித்தும் பயனில்லாததால் ,தம்மை
உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார்.நிறைவாக,
’உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே’
என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார்.அவருடன் சிறை வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் தமிழனுக்குக் கிடைத்தது.
ஆதிசங்கராச்சாரியரின் நோய் தீர்த்த செந்தூரான்
கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற அவர் தன்னுடைய தாயார் தண்ணீரெடுக்கச் செல்லும் ஆறு வெகு தூரத்தில் உள்ளது என்பதற்காக அவ்ஆற்றையே தன்னுடைய வீட்டிற்கு அருகில் திரும்பி ஓடச்செய்த ஆற்றல் மிக்கவர். மிகப்பெரிய சித்தரான அவரை காச நோய் தொற்றிக்கொண்டது. அதிலிருந்து மீள் முடியாமல் துன்பமடைந்தார்.சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அப்போது தோன்றிய சிவன்,அசுரனை சம்காரம் செய்த அற்புதத் தலமான திருச்செந்தூர் செல்வாய் அங்கு எம்முடைய அம்சமாக வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானைப் பணி ; உன்னுடையநோயைக் குணமாக்கும் ஆற்றல் கலியுகக் கந்தனிடமே உள்ளது என்றார்.ஆகாய வழியாக செந்தூர் வந்த சங்கரர், முருகப்பெருமானை குகைக் குடைவறையில் ஆதிசேஷன்[பாம்பு] முருகனின் பாதங்களைப் பூஜை செய்யும் அற்புதக் காட்சியைக் கண்டார்.தீராத தன்னுடைய வயிற்றுவலியைத் தீர்த்து வைத்திட முருகனிடம் வேண்டி கோயிலில் வழங்கிய விபூதியையும்,பன்னீர் இலையையும் உண்டார்.என்னே அற்புதம் அடுத்த நொடியில் அவரது நோய் அகன்றது.உடனே முருகனைப் போற்றி சுப்பிரமணிய புஜங்கம்[புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம்] என்ற நூலைப் பாடினார்.’’கண்டால் நின் இலை நீறு கைகால்வலிப்புக்-காசம் கயம்குட்ட முதலாய நோயும்-விண்டோடு மேபூத பைசாசம் யாவும்-வினையாவுமே செந்தி அமர்தேவ தேவே’’என்ற பாடலுடன் சிறப்பு வாய்ந்தது.
அருணகிரிநாதருக்கு வழி காட்டிய முருகன்
திருவண்ணாமலையில் பிறந்து சராசரி மனிதனாக சிற்றின்பத்தில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்ட அருணகிரிநாதர் ,மனமுடைந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழே விழ;முருகப்பெருமான் அவரைத்தாங்கி பிடித்தார்.முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார்.மனமுருக வழிபட்ட பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழிஎல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரி வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது.திருச்செந்தூரில் முருகனில் சிவனைக் கண்ட அருணகிரியார் ’கயிலை மலையனைய செந்தில்’ என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும் திருத்தாண்டவம் ஆடிக்காட்டினார்.இக்காட்சியை தற்போது கோயிலில் நடைபெறும் ஏழாம் திருவிழா நாளில் ‘சிவப்புச் சாத்தி’செய்யப்படும் நாளில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார்.
குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான்
ஸ்ரீவைகுண்டத்தில் சைவவேளாளர் மரபைச் சேர்ந்த சண்முகசிகாமணி
கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பிறந்த குமரகுருபரர் தமது
மூன்று வயதளவிலும் வாய் பேசாமல் ஊமை போலிருந்தார்.அது கண்ட
பெற்றோர் பெருந்துயரடைந்தனர்.இதற்கிடையில் பிறந்த இரண்டாவது
குழந்தை வாய் பேசியது.இதனால் மேலும் மனம் வருந்தினர்.அய்ந்து
வயதானது குமரகுருபரனுக்கு, ஊமைக் குழந்தையை தூக்கிக்கொண்டு
திருச்செந்தூர் முருகனின் கோயிலுக்கு வந்தனர்.முருகனின் சன்னிதி முன்பு
குழந்தைக் கிடத்தினர் 40 நாட்கள் விரதமிருந்தனர்,தினமும் மனமுருக
வேண்டிக்கொண்டனர்.யாதொரு பலனும் தெரியவில்லை.மனமுடைந்த
தம்பதியர் நாளை ஒரு நாள் பார்ப்போம் முருகன் அருளீயாவிடில்
நாமிருவரும் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற மனமுறுதியைக்
கொண்டனர்.காலையில் கடலில் நீராடி கொடிமரத்தடியில் மகனைக் கிடத்தி
விட்டு முருகனைத் தரிசிக்கச் சென்றனர்.அந்நேரம் முருகன் கோயில்
அர்ச்சகர் வடிவில் வந்து குமரகுருபரன் முன்பு ஒரு வெண்டாமரைப்
பூவொன்றினைக் காட்டி இது என்ன என்று கேட்டார்.அது நாள் வரையிலும்
பேசாமலிருந்த ஊமைக் குழந்தை ’பூ’ என்றது.’சைவம் தழைக்கப் பாடு’என்று
முருகன் கட்டளையிட்டு மறைந்தார்.’பூ மேவு செங்கமலப் புத்தேளும் ‘என்ற பாடல் அடியை முதலாகக் கொண்டு கந்தர் கலி வெண்பா நூலைப் பாடி முருகனின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தார்.ஊமையாய் இருந்தவனை கவி பாடச் செய்து குமரி முதல் காசி வரை பாடலால் உலகம் போற்றச் செய்த அற்புதம் செய்தார் நமது செந்திலாண்டவர்.
கோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள்
கோயில்களையும் திருப்பணிகளையும் கோபுரங்களையும் நாடாண்ட அரசர்களும் அரசிகளும் அதிகாரிகளும் செய்த வரலாற்றைக் கண்டுள்ளோம்.திருச்செந்தூரில் இத்தகைய வரலாற்றை புரட்டிப் போட்டுள்ளார் ஒருதுறவி. திருச்செந்தூர் கோயிலின் இராஜ கோபுரத்தைக் கட்டியவர் ஒரு ஆண்டியே.அதிகாரபலம்,பொருளாதார பலமிக்கவர்கள் நிறைந்த,அக்காலத்தில் தமது கோபுரத்தைக் கட்டத் தகுந்தவர் அத்துறவியே என்பதை அடையாளம் காட்டினார் முருகப்பெருமான்.அந்நாளில் தம் அடியவரான தேசிகமூர்த்தி என்பாரின் கனவில் தோன்றிய செந்திலாண்டவர் தம்முடைய கோபுரத் திருப்பணியை மேற்கொள்ளப் பணித்தார்.தேசிகமூர்த்தி திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஒடுக்கத் தம்பிரானாக இருந்தார்.அருள்மிகு தூண்டிகை விநாயகர் கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருப்பணி மடத்தில் தங்கி கோபுரப் பணியைத் தொடங்கினார்.
வேண்டுபவர்க்கு வேண்டுவன யாவற்றையும் அருளும்செந்திலாண்டவனின் அருளால் சந்தனாமலை பாறை மீது அஸ்திவாரம் போட்டுக் கல் தச்சு வேலைகளைத் தொடங்கினார்.உள்ளூர் மக்கள் வெளியூர் மக்கள் என சாரை சாரையாக வேலைக்கு வந்தனர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளியூரிலிருக்கும் வசதிபடைத்தவர்கள்,ஊர்களின் பொதுவான தலைமையிடமும்,பல்வேறு இன மக்களின் பங்களிப்பு வேண்டுமென, அவர்களிடமும் நன்கொடை வேண்டிப்பெற்றார்.அவ்வப்போது நன்கொடை வந்ததால் செலவுகளும் வேலைகளும் நடந்துகொண்டேயிருந்தன இந்நிலையில் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையை முருகன் ஏற்படுத்தினார்.பக்தர்களைச் சோதிப்பது இறைவனின் பொழுது போக்கு அல்லவா.தம்முடைய இக்கட்டான நிலையைக் கண்டு..என்ன செய்வது என்று மனம் வேதனையடைந்த தேசிகமூர்த்தி செந்திலாண்டவனை நோக்கிக் கும்பிட்டார்.முருகா…உன் பெயர் கூறி நான் வழங்கும் திருநீறு அவரவர் வேலைக்கேற்ற ஊதியமாக மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.மாலை வந்தது வேலையை முடித்து சம்பளம் பெறவேண்டி பணியாளர்கள் சாமியை நோக்கி வந்தனர்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலை விபூதிப் பொட்டலத்தைக் கொடுத்தார்.அப்பொட்டலத்தை தூண்டிவிநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைக் கும்பிட்டு திறந்து பாருங்கள் என்று கூறினார். வேலையாளர்கள் அப்பொட்டலத்தை தூண்டிவிநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைக் கும்பிட்டு திறந்து பார்த்தனர்.என்னே ஆச்சரியம்…அவரவர்கள் செய்த வேலைக்கேற்ற ஊதியம் அதனுள் இருந்தது.இவ்வாறு பணிகள் தொடர்ந்தது.தேசிகமூர்த்திசாமிகளின் தன்னலமற்றத் தொண்டு,அருட்சுடர் விடும் கண்கள்,என்னேரமும் முருகனின் மீதான பக்தி,திருப்பணி மீதான கவலை இவற்றைக் கண்ட முருக பக்தர்கள் தங்களுடைய ஊரில் பல்வேறு சமுதாய மக்களுக்கும் வரி போட்டுப் பணம் பிரித்து கோபுரத் திருப்பணிக்காக வழங்கியுள்ளனர்.இது குறித்த செப்பேடுகள் இன்றளவும் தலை நிமிர்ந்து உள்ளது.சாத்தூர் செப்பேடு,ஏழாயிரம் பண்ணைச்செப்பேடு,சாத்தூர் நென்மேனி,வடமலைபுரம் செப்பேடு,சிவகாசி செப்பேடு,தட்டப்பாறை வணிதம் பட்டயம் ஆகியன கோபுரத்திருப்பணிக்காக சாதி பேதமின்றி பொன்னும் பொருளும் வழங்கிய தகவலைத் தருகிறது.ஒன்பது நிலைக் கோபுரத்தில் ஆறு நிலைகள் எழுந்து நின்றன.சுற்று வட்டார மக்களில் வசதி படைத்தோர்,எளியோர் என முருகனடியார் பலரிடமும் ந்ன்கொடைப் பெற்றாகிவிட்டது.மீண்டும் மீண்டும் அவர்களையேச் சென்றுப் பார்ப்பது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.மனம் வருந்திய தேசிகமூர்த்தி கண்ணீர் சிந்தினார்.அன்றிரவு கனவில் தோன்றிய முருகன்,’அருகிலுள்ள காயல்பட்டிணத்தில் வசிக்கும் வள்ளல் சீதக்காதியைச் சென்று பார்.உன் மனக்குறை தீரும் என்று கூறி மறைந்தார்.அதே போன்று பெறு வணிகரான சீதக்காதியின் கனவிலும் தோன்றிய முருகன் நாளை எனது பக்தன் வருவார்,அவரிடம் உன்னிடமுள்ள ஒரு மூடை உப்பைக் கொடு என்று கூறி மறைந்தார்.மறு நாள் இசுலாம் சமயத்தைச் சேர்ந்த சீதக்காதியைச் சென்றுப் பார்த்தார்.முருகன் தன் மீது கொண்ட பாசத்தால் மனம் நெகிழ்ந்த சீதக்காதி ஒரு மூடை உப்பைக் கொடுத்தனுப்பினார்.உப்பு மூடையுடன் திருப்பணி மடத்திற்கு வந்த தேசிகமூர்த்திக்கு முருகனின் உத்தரவின் பொருள்,உப்பு மூடையைத் திறந்துப் பார்த்தபின்பு விளங்கியது.என்னே அற்புதம்…உப்பு மூடை அனைத்தும் தங்க காசுகளாக இருந்தன.கோபுரத்தின் ஒன்பது நிலைகளும் கும்பகலசத்துடன் உயர்ந்தன.உவகையுடன் குடமுழுக்கு நாளைத் திட்டமிட்டு பணிகள் நடந்து வந்தன.அன்றிரவு செந்திலாண்டவன் தேசிகமூர்த்தியின் கனவில் தோன்றி,தேசிகமூர்த்தி உன்னுடையப் பணிகள் நிறைவுற்றன,உடனே காந்தீஸ்வரம் செல்.அங்குதான் நீ இருக்க வேண்டுமென கட்டளையிட்டார்.முருகனின் கட்டளையேற்ற தேசிகமூர்த்தி உடனே காந்தீஸ்வரம் சென்றார்.கோபுர குடமுழுக்கு நடைபெற்றபோது அங்கிருந்தே அனைத்து நிகழ்ச்சிகளையும் முருகனருளால் கண்டு கழித்தார்.தற்போதுள்ள ஆழ்வார்திருநகரிக்கு கிழக்கே உள்ள ஆழ்வார்தோப்பு என்னும் நாடாழ்வார்களின் ஊரில் காந்தீஸ்வரம் உள்ளது.அருள்மிகு ஏகாந்தலிங்கேஸ்வரர் கோயிலின் வடபுறம் உள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கி தவமியற்றினார். இவருடைய ஜீவசமாதி இங்குள்ளது.இன்றும் மக்கள் வழிபட்டு தங்களுடைய நோய்களையும் கவலைகளையும் போக்கிக் கொள்கின்றனர்.கோபுரத்திருப்பணி முருகனின் தொண்டனான ஆண்டி ஒருவரின் விடாமுயற்சியையும்,பிற சமயமான இசுலாம் சமயத்தை சேர்ந்த சீதக்காதி மீது முருகப்பெருமான் கொண்ட நம்பிக்கையையும் பாசத்தையும் காட்டுகிறது.
வென்றிமாலைக் கவிராயர்
திருச்செந்தூரில் முருகனுக்குத் தொண்டு செய்யும் திரிசுதந்திரர் குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார்.தொடக்கக் காலக்கல்வி கசந்தது.செந்திலாண்டவன் கோயிலைச் சுற்றுவது,முருகனின் நாமத்தை எந்நேரமும் கூறுவது,மனம் போலப் பாடுவது எனத் தொடர்ந்து வந்தார்.தந்தையின் கண்களுக்கு பொறுப்பற்றப் பிள்ளையாக வென்றிமாலைக் காட்சி அளித்தார்.வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியாக அமையுமென திருக்கோயில் மடப்பள்ளியில் கையாளாகச் சேர்த்து விட்டார்.முருகனின் பூஜைக்காக பிரசாதங்கலைச் சமைத்து வழங்கவேண்டியது இவரது பொறுப்பு.இவ்வாறிருக்கும்போது ஒருநாள் செந்திலாண்டவனைச் சிந்தித்து தியானத்தில் இருந்து விட்டார் வென்றிமாலை.பூஜைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்படவில்லை. சண்முகருக்கு பூஜைக்கு வேண்டிய பிரசாதத்தை வாங்க வந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்கும் உதவாதவன் என்று கூறி நையப்புடைத்து விரட்டி விட்டனர்.மனம் வருந்திய வென்றிமாலை கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தார்.இனி உயிரோடிருப்பதில் அர்த்தமில்லை என்று கடலில் விழுந்து உயிரை விடத் துணிந்தார்.அந்நேரம் நில் என்ற குரல் கேட்டது முதியவர் வடிவில் வந்த முருகன் வென்றிமாலையைத் தடுத்து,செவலூர் என்ற ஊரில் வாழும் கிருஷ்ண சாஸ்திரியைப் பார்,என்று கூறி மறைந்தார். வென்றிமாலை செவலூர் சென்று முருகனின் கட்டளையை சாஸ்திரிகளிடம் கூறினார்.மனம் மகிழ்ந்த சாஸ்திரி,தாம் வட மொழியில் பாடிவைத்திருந்த திருச்செந்தூர்மகாத்மியத்தை [திருச்செந்தூர் தலபுராணம்]தமிழில் பாடக் கூறினார்.எப்படிப் பாடுவேன்…ஏதோ நாவில் வந்ததைப் பாடி வந்தேன்.தமிழே சரியாக அறியாத நான் எப்படிப் பாடுவது…என்றார்.செந்திலாண்டவனை நினைத்துப் பாடு என்றார் சாஸ்திரி.முருகனை நினைத்துப் பாடலைத் தொடங்கினார்.வென்றிமாலையின் அறிவிலும் நாவிலும் முருகன் குடி கொண்டான்.சிவபெருமானை முதலாவதாக வைத்து 899 பாடல்களை இனிய,எளிய தமிழில் பாடினார்.வென்றிமாலையின் கவித்திறன் கண்ட கிருஷ்ண சாஸ்திரி ‘வென்றிமாலைக் கவிராயர்‘என்ற பட்டத்தை வழங்கினார்.தாம் பாடிய திருச்செந்தூர் தல புராணச் சுவடிகளுடன் திருச்செந்தூர் வந்தார் தாமியற்றியப் பாடல்களை அரங்கேற்றப் போகிறேன் என்று கூறினார்.அவருடைய உறவினர்கள் வென்றிமாலைக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று கேலி பேசினர்.கோயில் நிர்வாகிகளிடம் அரங்கேற்றம் செய்வது குறித்து அனுமதி வேண்டினார்.சமையல் கூடத்தில் வேலை செய்தவனாவது கவிதை பாடுவதாவது என்று புறம் தள்ளினர் கோயில் நிர்வாகிகள்.தனக்கும் தனது திருச்செந்தூர் தல புராணநூலுக்கும் நேர்ந்த அவமானத்தால் மனமுருகி அழுதார்.தலபுராணச் சுவடிகளை கடலினுள் எறிந்து விட்டு தவமிருந்தார்.நீண்டநாள் தவத்தால் முருகனடி சேர்ந்தார்.கடலில் இட்ட ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச்சென்று ஈழநாட்டில் பனைமுனை என்ற இடத்தில் கறை ஏறியது.அவ் ஏடுகள் முருகனடியார் ஒருவரது கையில் கிடைத்தது.அந்நூலையும் அதன் பொருளையும் அறிந்த அடியார் மெய்சிலிர்த்தார் முருகன் தனக்குக் கொடுத்த பிறவிப் பயன் என்று கொண்டாடினார்.தினமும் ஏடுகளுக்குப் பூ இட்டு தூப தீபம் காட்டி பூஜை வைத்து வழிபட்டார்.அந்நாளில் கொடிய நோய் ஒன்று அவ்வூரில் பரவியது.பலர் மாண்டனர்.ஆனால் திருச்செந்தூர் தல புராணம் இருந்த அடியார் வீட்டிலும், அத்தெருவிலும் நோய் புகவில்லை ; பரவவில்லை.இவ்வற்புதம் ஈழ நாடு முழுவதும் பரவியது.வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் அரங்கேற்ற நினைத்த தலபுராணம் அயல் நாடுகளில் மக்களின் உள்ளங்களில் அரங்கேறியது.திருச்செந்தூரில் வேதமோதும் திரிசுதந்திரர் குடும்பத்தில் தோன்றிய வென்றிமாலை முருகனின் அருள் தொண்டராவார்.