திருத்தணிகை (குன்றுதோறாடல்)

Arulmigu Thiruthani Murugan Temple

முகவரி & தொடர்பு


Address

Thiruthani Hill, Thiruttani, Tamil Nadu 631209, India

GPS

13.172080669046, 79.603659475539

Telephone


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. “தொண்டை நாடு” என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் – வள்ளிமலை – சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி – திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.

தணிகை 

முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.
தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், “அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை” என்று கொள்ளுதலும் பொருந்தும்.

திருத்தணிகை மலை

இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் “பச்சரிசி மலை” என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் “பிண்ணாக்கு மலை” என்றும் கூறப்படுகின்றன.

ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. “சரவணப் பொய்கை” என வழங்கும் புகழ்மிக்க “குமார தீர்த்தம்” என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு “மடம் கிராமம்” என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.

திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

அருணகிரிநாதர் தனது பாடலில் “அழகுத் திருத்தணிமலை” என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு 

திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் “மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே” என்று பாடியுள்ளார்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் “கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்” என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

திருவிழா

மாசிப் பெருந்திருவிழா – வள்ளி கல்யாணம் – 10 நாட்கள் திருவிழா – இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர். சித்திரைப் பெருந்திருவிழா – தெய்வானை உற்சவம் -10 நாட்கள் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். ஆடிக் கிருத்திகை -10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா, மற்றும் ஆற்காடு பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேசமான திருவிழா ஆகும். இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ் ,ஆங்கிலபுத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

ஆடி கிருத்திகை விசேஷம்

முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.

தலச்சிறப்பு 

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம்.இங்கு மூல

ஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.
இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன்
இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

வள்ளலார் பெற்ற அருள் 

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.

சூரசம்ஹாரம் இல்லை

முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. தற்போது, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

கஜவள்ளி

திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக “கஜவள்ளி’ என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

புத்தாண்டில் படிபூஜை

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது,புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.

வெந்நீர் அபிஷேகம்

மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நோய் தீர்க்கும் சந்தனம்

திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்

மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல்,பொங்கல் படைத்தல் ,சுவாமிக்கு சந்தனகாப்பு ,பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் ,அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல் ,அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

குட்டித்தகவல்கள்

* சித்திரை, மாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சித்திரையில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. திருமணத்தில் நம்பிராஜன் தம்பதியர் பங்கேற்கின்றனர்.

* பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்செய்கின்றனர்.

* வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

* வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

* திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். இதற்கு கட்டணம் ரூ.1100.

* இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார்.

 

 

Leave a review

Your email address will not be published. Required fields are marked *