Address
Nallur Kandaswamy Temple, Jaffna, Sri Lanka
GPS
9.674310448366, 80.030104497509
Telephone
தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள, 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான, நல்லூர் என்னுமிடத்திலுள்ளது.
இதன் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
வரலாறு
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புனனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
* “இலகிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே”
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி புவனேகவாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, சண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
* “சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா”
திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீ சங்கபோதி புவனேகவாகு… என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரொட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658 – 1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.