Address
Nagapattinam Rd, Poravachery, Sikkal, Tamil Nadu 611108, India
GPS
10.756692065947, 79.798496547558
தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டத்தின் சிக்கல் என்னும் ஊரில் எட்டுக்குடி முருகன் ஆலயமும் சிக்கல் சிங்காரவேலர் ஆலயமும் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வெண்ணைப்பிராண், நவநீதேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் ஆவார். இங்கு உற்சவராக சிங்காரவேலர் வீற்றிருக்கின்றார்.
கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சன்னதியுடன், வள்ளி, தெய்வானை கூடிய சிங்காரவேலர் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.
புராணகாலத்தில் இத்தலத்தில் மல்லிகை மலர்கள் பூத்துக் குலுங்கும் காடுகள் இருந்ததால் இதற்கு மல்லிகைவனம் எனும் பெயர் வழங்கப்பட்டிருந்தது. இங்கு வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். இதனால் இதற்கு வசிஷ்டாசிரமம் எனும் பெயரும் நிலவி வந்துள்ளது.
அக்காலகட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு தான் செய்த பிழைக்காகச் சாபம் பெற்று இங்கு வந்து சேர்ந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் எனும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. அப்போது அதனுடைய பால் பெருகி, குளம் முழுவதும் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார்.பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராணம் கூறுகின்றது. வெண்ணெய்யால் உருவாக்கப்பட்டதால் இங்குள்ள இறைவனுக்கு வெண்ணெய்நாதர் எனும் பெயரும் உண்டு.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. கோயிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்டுள்ளது.
சிக்கல் சிங்காரவேலர்
ஆலயத்தின் மையத்தில் உயரமான 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீதநாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சன்னதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சன்னதியும் உள்ளன.
இங்கு உற்சவராக வீற்றிருக்கும் வேலருக்கு ஆண்டுதோறும் கந்தர் சஷ்டி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் நடைபெறும் இவ்விழாவின் ஐந்தாம் நாள், தேர்விழா முடிந்ததும் சூரபத்மனை அழிப்பதற்காக அன்னை பராசக்தியிடம் வேல்வாங்கும் வைபவம் நிகழ்கின்றது. வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கின்றது. “சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம்” என்பது இங்கு வழக்கிலுள்ள ஒரு பழமொழியாகும். முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதால் வேல்நெடுங்கண்ணி என்ற பெயர்கொண்டு அம்மன் அழைக்கப்படுகின்றார்.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது: